முத்தூர் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா
- சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு ஆற்றல் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
- 90-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப பள்ளிகளில் மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன.
முத்தூர் :
முத்தூர் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
ஈரோடு ஆற்றல் அறக்கட்டளையின் சார்பில் திருப்பூர் மாவட்டம், முத்தூர், செட்டியார்பாளையம் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரியில் கல்வி மற்றும் விளையாட்டில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு ஆற்றல் விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி குழு தலைவர் பி.அய்யாத்துரை தலைமை தாங்கினார். தாளாளர் மற்றும் செயலாளர் எம்.கே.பழனிசாமி, பொருளாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் எஸ்.பி.சரவணன் வரவேற்று பேசினார்.
விழாவில் ஈரோடு ஆற்றல் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆற்றல் அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியில் தற்போதைய 2022-2023-ம் கல்வியாண்டில் பல்கலைக்கழக தேர்வில் முதன்மையான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் கல்வி, விளையாட்டு, கலை, இலக்கிய துறையில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்த மாணவர்கள் என மொத்தம் 60 மாணவ, மாணவிகளுக்கு ஆற்றல் விருது, பரிசு கேடயம், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.அப்போது அவர் கூறியதாவது:-
மாணவர்களுக்கு கல்வியில் முக்கியமான காலகட்டம் கல்லூரி படிப்பு ஆகும். மேலும் மாணவர்கள் கல்வியில் முழுமையான கவனம் செலுத்தி சிந்தனையை சிதறவிடாமல் பட்டப்படிப்பு பயில வேண்டும். ஆற்றல் அறக்கட்டளையின் மூலம் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 90-க்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப பள்ளிகளில் கட்டிட வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே மாணவ, மாணவிகள் கல்வியே சிறந்த செல்வம் என கருதி நல்ல முறையில் கல்வி பயின்று நாட்டில் சிறப்பான எதிர்காலத்துடன் வாழ்வதற்கு முன் வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் துணை செயலாளர் வி.ஜி.ரமேஷ், செயற்குழு உறுப்பினர் மோகனசுந்தரம் மற்றும் கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை தங்கமணி நன்றி கூறினார்.