பள்ளி தரம் உயர்த்தப்படாததால் 8கி.மீ., தூரம் நடந்து செல்லும் மாணவர்கள்
- 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதாக பள்ளி கல்வி அமைச்சர் மானியக்கோரிக்கையில் அறிவித்திருந்தார்.
- 8-ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், 9-ம் வகுப்பிற்கு 8 கி.மீ., செல்ல வேண்டியுள்ளது.
திருப்பூர் :
ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை விதிகளின்படி புதிய பள்ளிகள் துவங்கவும், தரமும் உயர்த்தப்படுகின்றன.கடந்த ஆட்சியில் 50 அரசு நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு 35 பள்ளிகள் உயர்த்தப்பட்டன.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் 2021-22ம் கல்வியாண்டில் 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவதாக பள்ளி கல்வி அமைச்சர் மானியக்கோரிக்கையில் அறிவித்திருந்தார். இருப்பினும் கடந்தாண்டு ஒரு நடுநிலைப்பள்ளி கூட தரம் உயர்த்தப்படவில்லை.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் பழையகோட்டைபுதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தரம் உயர்த்தப்படாததால் மாணவர்கள் உயர்கல்விக்காக8 கி.மீ., வரை பயணிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது.இப்பள்ளியில், வெங்கரையாம்பாளையம், நல்லம்மாள்புரம், கஸ்பா பழையகோட்டை, கண்ணியன்கிணறு, இச்சிக்காட்டுவலசு, சேமலைவலசு ஆகிய ஊர்களை சேர்ந்த 172 மாணவர்கள் படிக்கின்றனர். காங்கயம் வட்டத்தில் கிராமப்புற பள்ளிகளிலேயே அதிக மாணவர்கள் எண்ணிக்கை கொண்டதுஇப்பள்ளி.
இங்கு 8-ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், 9-ம் வகுப்பிற்கு 8 கி.மீ., செல்ல வேண்டியுள்ளது. சரியான நேரத்தில் அரசு பஸ் வசதியோ, தனியார் பஸ் வசதியோ இல்லை. குழந்தைகள் பள்ளிக்கு காலை 7 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு வீடு திரும்புகின்றனர்.மாணவிகள் நீண்ட தூரம் சைக்கிளில் செல்வது பாதுகாப்பில்லாததால் நாளொன்றுக்கு 100 ரூபாய் செலவழித்து ஆட்டோவில் அனுப்புகின்றனர்.
பொருளாதார சிக்கல் ஏற்படுவதாக சில பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கே அனுப்புவதில்லை.அப்பகுதி ஊராட்சி உறுப்பினர் ரஞ்சிதம், பழனியம்மாள் கூறுகையில், பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக்க உயர்த்த பொதுமக்கள் சேர்ந்து ஒரு லட்சம் ரூபாய் வசூல் செய்து அரசுக்கு செலுத்தி விண்ணப்பம் அனுப்பி 2ஆண்டுகள் ஆகிறது. இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.எங்கள் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க, பழையகோட்டைபுதூர் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக மாற்ற அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் கருணை காட்ட வேண்டும் என்றார்.