வீடுகளில் மூலிகைத்தோட்டம் அமைக்க மானிய விலையில் செடிகள்
- 5 வகையான பழ செடிகள் அடங்கிய பழ தொகுப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
- மாடித்தோட்ட கிட் 50 சதவீதம் மானியத்தில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது.
மடத்துக்குளம் :
வீடுகளில் மூலிகைத்தோட்டம் அமைக்க மாடித்தோட்டம் கிட் தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இது குறித்து மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது :- மடத்துக்குளம் வட்டாரத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காய்கறி விதைகள் அடங்கிய விதைத்தொகுப்பு, 5 வகையான பழ செடிகள் அடங்கிய பழ தொகுப்பு ஆகியவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தற்போது மூலிகை தோட்டம் அமைக்க 10 வகையான மூலிகை செடிகள் அடங்கிய மாடித்தோட்ட கிட் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
தூய்மையான காற்றை சுவாசிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நாட்டு மருத்துவத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மருத்துவ தாவரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அழிந்து வரும் மருத்துவ தாவரங்களை பாதுகாக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மாநில தோட்டக்கலை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் நடப்பாண்டு வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க, தமிழக அரசு தோட்டக்கலைத்துறை வாயிலாக 10 வகையான மூலிகைச்செடிகள் அடங்கிய மாடித்தோட்ட கிட் 50 சதவீதம் மானியத்தில் ரூ.750-க்கு வழங்கப்படுகிறது.இதில் வழங்கப்படும் துளசி, இருமல், சளி, வயிற்றுப்புழு நீக்கம் உள்ளிட்ட பயன்பாட்டிற்கும், கற்பூரவல்லி, சளி, இருமல், ஆஸ்துமா, வயிற்றுப்புண், அஜீரணப் பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.திருநீற்றுப்பச்சை, வயிறு தொடர்பான நோய்களுக்கு சுவையின்மை, வாந்தி, குடல் புண் ஆகியவற்றை போக்குகிறது.ஆடாதொடை, இருமல், சளி, தொண்டைக்கட்டு, இளைப்பு, வாந்தி, விக்கல் ஆகிய நோய்களுக்கு தீர்வாகவும், வல்லாரை, நினைவாற்றலைப்பெருக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.திப்பிலி, இருமல், இரைப்பு அனாமிகா, சுவையின்மை பொருமல், தலைவலி, நீரேற்றம், தொண்டை நோய்கள் நீங்கும்.
அமுக்கிராக்கிழங்கு, பசியை உண்டாக்குதல், தோல் நோய்கள் ஆகியவற்றுக்கும், பிரண்டை, வயிற்றுப்புண்ணை ஆற்றும். பசியை உண்டாக்கும். எலும்புகளை வலுப்பெறச்செய்யும் திறன் உள்ளதாகும். கற்றாழை, குடல் புண்ணை ஆற்றவும், மூலம் பவுத்திரம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வாகவும், கீழாநெல்லி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், நாக்கு வறட்சி, தாகம் ஆகியவற்றை போக்கும் மருந்தாக சித்தமருத்துவத்தில் பயன்படுகிறது.இவ்வாறு 10 வகையான மூலிகைத்தோட்ட தொகுப்பில் ஒவ்வொரு வகையில் தலா 2,10 செடி வளர்ப்பு பைகள், 10 தென்னை நார் கட்டிகள், மண் புழு உரம், 4 கிலோ மற்றும் தொழில் நுட்ப புத்தகம் வழங்கப்படுகிறது.நிலப்பகுதி மற்றும் வீடுகளிலுள்ள மாடிப்பகுதியில் மூலிகைத்தோட்டம் அமைக்கலாம். பையில் தென்னை நார் கட்டியை வைத்து 10 லிட்டர் நீர் ஊற்ற வேண்டும்.
ஒரு பைக்கு 400 கிராம் மண்புழு உரம் கலந்து, தென்னை நார் கழிவுடன் கலந்த உரத்தை செடிகள் வளர்ப்பதற்கான பைகளில் நிரப்பி 7 முதல் 8 நாட்கள் வைத்திருந்து ஒரு பையில் ஒரே வகையான இரண்டு மூலிகைச்செடிகள் நட வேண்டும்.பிறகு பூ வாளி கொண்டு நீர் ஊற்ற வேண்டும். கோடை காலத்தில் ஒரு நாளைக்கு இருமுறை நீரூற்ற வேண்டும்.மூலிகை தோட்ட தொகுப்பு பெற மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன் 96598 38787 என்ற எண்ணிலும், நித்யராஜ் 84890 95995 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.