உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மழைநீரை சேகரிக்க கோடை உழவு - வேளாண் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்

Published On 2023-03-06 06:57 GMT   |   Update On 2023-03-06 06:57 GMT
  • நீரை பூமிக்குள் சேகரிக்க கோடை உழவு மிக பயனுள்ளதாக இருக்கிறது.
  • காற்று, மழையால் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும்.

உடுமலை :

கோடை கால உழவு முறை மற்றும் எந்திரங்கள் பற்றி தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆனந்தராஜா, குகன் ஆகியோர் கூறியதாவது:-

கோடையில் பெய்யும் மழை நீரை பூமிக்குள் சேகரிக்க கோடை உழவு மிக பயனுள்ளதாக இருக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை கொக்கி கலப்பை கொண்டும், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டி கலப்பை கொண்டும் கோடை உழவு செய்ய வேண்டும். இதனால் மண் மிருதுவாகி மழைநீரை ஈர்க்கும் திறன் அதிகரிக்கிறது.

கோடை உழவு காற்று, மழையால் ஏற்படும் மண் அரிப்பை தடுக்கும். முந்தைய பயிரின் தூர்கள், களைகளை உரமாக மாற்றும். தீமை செய்யக்கூடிய பூஞ்சாணங்கள், பூச்சிகள் கோடை வெப்பத்தாலும், பறவைகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.

உழவின் போது மேல் மண்ணை கீழாகவும், கீழ் மண்ணை மேலாகவும் புரட்டி விடுவதால் மண்ணின் நாள்பட்ட இறுக்கம் தளர்த்தப்பட்டு, காற்றோட்டம், நீர்ப்பிடிப்பு தன்மை அதிகரிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை உழவு செய்வதால் மண்ணின் வளம் அதிகரிக்கப்பட்டு கூடுதல் மகசூல் பெற வழிவகை செய்கிறது.

இறகு வார்ப்பு கலப்பையானது தரையில் இருந்து மண்ணை தோண்டி குறைந்தபட்சம் இரண்டு அடி தள்ளி பக்கவாட்டு பகுதியில் போடும் . கலப்பையில் இருந்து இரண்டடி தள்ளி மண் பிரண்டு விழும். இப்படி செய்யும் பொழுது மண் இலகு தன்மையும், அடுத்த விவசாயத்திற்கான எளிய தன்மையும் கிடைக்கும். உளி கலப்பை பூமிக்கடியில் கிட்டத்தட்ட இரண்டு அடியில் உள்ள மண்ணை உடைக்கிறது.

சட்டிக்கலப்பையானது ஒன்றை அடி ஆழமுள்ள மண்ணை வெட்டி மண்ணை கட்டியாக போடும். ஆரம்ப காலங்களில் இந்த வகை கலப்பைத்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் இறகு வார்ப்பு கலப்பை வந்தது.சட்டிக்கலப்பையை பயன்படுத்தினால் மண் கட்டி கட்டியாக விழும். அதை உடைப்பதற்கு ஒன்பது கொத்து கலப்பை கொண்டு மறுபடியும் உழவு செய்ய வேண்டியிருக்கும்.

சுழல் கலப்பை, கட்டி உடைப்பான், மண்ணை பிளந்து கட்டிகளை உடைக்கிறது. மண்ணை பிளப்பதற்கு கத்தி போன்ற முனைகள் பயன்படுகின்றன. இவ்வகை கலப்பை 12 முதல் 15 செ.மீ., ஆழம் வரை உழக்கூடியது. இது இலகிய மண்ணிற்கு மிக பொருத்தமானது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News