உள்ளூர் செய்திகள்

உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து.

பாமாயில் இறக்குமதி ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் - உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தல்

Published On 2023-05-15 05:00 GMT   |   Update On 2023-05-15 05:00 GMT
  • 200 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை வெளியிட்டதாக தெரிய வருகிறது.
  • தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாக உள்ளனர்.

பல்லடம் :

பாமாயில் இறக்குமதி ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் சமீபத்தில் 200 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை வெளியிட்டதாக தெரிய வருகிறது.இது தென்னை விவசாயிகளுக்கு வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான தென்னை விவசாயிகள் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாக உள்ளனர். கொப்பரைக்கும் உரிய விலை கிடைப்பதில்லை.

எனவே நீண்ட காலமாக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறோம். சமீபத்தில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில், நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் இந்த பாமாயில் ஒப்பந்த புள்ளி அறிவிப்பு விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. தென்னை விவசாயிகளை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்ககவும், தமிழ்நாடு அரசு பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் உரம், இடுபொருள்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News