பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஆசிரியர்கள் கோரிக்கை
- 30 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்து வரும் ஆசிரிய பெருமக்களுக்கு பாராட்டு விழா என ஐம்பெரும் விழா நடந்தது.
- விழாவிற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் ரா. துரைசாமி தலைமை தாங்கினார்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள ஒரு மண்டபத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் இயக்கத்தின் மாணிக்க (40 வது ஆண்டு) விழா, பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்று மீண்டவர்களுக்கு பாராட்டு விழா, 30 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்து வரும் ஆசிரிய பெருமக்களுக்கு பாராட்டு விழா என ஐம்பெரும் விழா நடந்தது.
விழாவிற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் ரா. துரைசாமி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் செந்தில் குமார் வரவேற்று பேசினார். வட்டார மகளிர் அணி செயலாளர் சுசீலா உறுதிமொழி ஏற்புரை ஆற்றினார். இதில் தமிழக ஆசிரியர் கூட்டணி அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- மக்கள் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு கோரிக்கைகள் ஏதாவது நிறைவேற்றி இருக்கிறதா? என்றால் இல்லை. உதாரணத்திற்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் கூறினார். நான்கு சட்டமன்ற கூட்டம் நடந்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என சொல்லாமலே பார்த்து கொள்கிறார். இது மிகவும் மனவேதனையாக உள்ளது. அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமையை மாற்ற வேண்டும். ஆசிரியர்கள் தங்களது பணிகளை செய்வதற்கு கூட முடியாமல் இணையதளத்திலிருந்து அனைத்து பதிவுகளையும் ஆசிரியர்களே பதிவு செய்ய வேண்டி உள்ளது. பாடம் நடத்தக்கூட ஆசிரியர்களுக்கு நேரம் ஒதுக்காமல் இயந்திரமாக ஆக்கி வருகிறார்கள்.
எனவே இணையதள பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை செய்ய வேண்டும். 6.25 லட்சம் பேர் புதிய ஓய்வூதிய திட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை சுயமாக அமல்படுத்துவோம் என அரசு உறுதி தர வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.