அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ததை கைவிட வேண்டும் -ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பினர் கலெக்டரிடம் மனு
- கழிவுநீர் கால்வாய் பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கும், அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது.
- அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் :
பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் குமார், ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் ஊராட்சி தலைவர்கள் கோபால், சோமசுந்தரம், ரவிச்சந்திரன், நடராஜ், ஆதித்தமிழர் ஜனநாயக பேரவையினர் உள்ளிட்டவர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், பொங்கலூர் ஊராட்சியில் செல்வக்குமார் என்பவர் வீட்டின் கழிவுநீர் கால்வாய் பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கும், அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். செல்வக்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் சம்பவ இடத்தில் இல்லாத மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் ஊராட்சி செயலாளர், ஊராட்சி துணை தலைவர் மீது அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் கொலைமுயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசுதுறை அதிகாரிகள் மீது எந்தவித விசாரணையும் இன்றி வழக்குப்பதிவு செய்ததை கைவிட வேண்டும்' என்று கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதனிடமும் மனு கொடுத்து முறையிட்டனர்.