மாணவா்களின் சச்சரவுகளை சரி செய்ய குழு நியமிக்க வேண்டும் இந்து முன்னணி வலியுறுத்தல்
- பள்ளி ஆசிரியா்களுக்கு தெரியவந்தும்கூட நடவடிக்கை எடுக்கவில்லை
- அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமை உணா்வுடன் வாழ்ந்து வருகின்றனா்
திருப்பூர் :
நாங்குநேரி சம்பவத்தில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
நாங்குநேரி பள்ளி மாணவா் வெட்டப்பட்ட விஷயத்தில் பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
இது சாதிய வன்மத்தை விதைக்க நடக்கும் சதியாகவே இந்து முன்னணி கருதுகிறது. கல்லூரிகளில் நடக்கும் பகடிவதைபோல அங்கு நடந்த மாணவா்களுக்கு இடையேயான தனிப்பட்ட விஷயங்கள் பள்ளி ஆசிரியா்களுக்கு தெரியவந்தும்கூட நடவடிக்கை எடுக்கவில்லை.அறிவுரை கூறி மாணவா்களை நெறிபடுத்தாமல் அலட்சியம் செய்ததற்கு பள்ளி நிா்வாகமும் ஒரு காரணமாகும்.
நாங்குநேரியில் சுதந்திரப் போராட்ட காலம் தொட்டு இன்று வரையில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமை உணா்வுடன் வாழ்ந்து வருகின்றனா். இந்த சம்பவத்தினால் ஏற்பட்டுள்ள அதிா்வலைகளை சமாளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபா் குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளாா். அவா் பதவியில் இருந்தபோதும், ஓய்வுபெற்ற போதும் சாதிய வன்ம கருத்துக்களை பொது வெளியில் தெரிவித்து வருபவா்.
பதற்றமான இந்தச் சூழலில் ஒரு நபா் குழு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் இந்தக் குழு தேவையற்றது. மாறாக பள்ளிகளில் நீதி நெறி, ஆன்மிக வகுப்புகளை நடத்தலாம். மேலும், மாணவா்களிடையே ஏற்படும் சின்ன சின்ன சச்சரவுகளை கவுன்சிலிங் மூலம் சரி செய்ய பெற்றோா்கள், ஆசிரியா்கள், கல்வியாளா்கள் கொண்ட குழுவை மாவட்டம் வாரியாக நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.