உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஊதியூர் மலையடிவார பகுதியில் கன்றுக்குட்டியை தூக்கிச்செல்ல முயன்ற சிறுத்தை விவசாயி வருவதை கண்டு தப்பி ஓடியது

Published On 2023-07-03 10:44 GMT   |   Update On 2023-07-03 10:44 GMT
  • சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகளை பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
  • தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தூக்கி செல்ல முயன்றது.

 காங்கயம்

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் வனப்பகுதிக்கு வந்த ஒரு சிறுத்தை அங்கு பதுங்கி மலையடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகளை பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. இந்த நிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தெரிவித்தனர். பொதுமக்கள் தெரிவித்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயிகளின் தோட்டத்தில் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆட்டுக்குட்டிகள் தொடர்ந்து மாயமாகி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று கால்தடங்களை ஆய்வு செய்து சிறுத்தை வேட்டையாடியதை உறுதி செய்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊதியூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிறுத்தையின் வேட்டையை கண்காணிக்க தங்களது தோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணியளவில் ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயி கார்த்தியின் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை மெதுவாக நடந்து சென்று இரை தேடிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயி ராஜாமணி என்பவரது தோட்டத்தில் புகுந்த சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை தூக்கி செல்ல முயன்றது.

அப்போது கன்றுக்குட்டியின் அலறல் சத்தத்தை கேட்டு ராஜாமணி வெளியே ஓடி வருவதை பார்த்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடி வனப்பகுதிக்குள் மறைந்தது. இதையடுத்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் நேரில் சென்று கால் தடயங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சிறுத்தையை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News