தொடர் விடுமுறை எதிரொலி திருப்பூரில் வாகன நிறுத்தும் இடங்கள் நிரம்பின
- ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள வாகனநிறுத்தும் இடங்கள் நிரம்பி வழிந்தன.
- மழைக்காலங்களில் வாகனங்கள் பல சரிந்து கீழே விழும் நிலை உள்ளது
திருப்பூர் :
வந்தாரை வாழ வைக்கும் ஊர் என்ற பெருமை திருப்பூருக்கு உண்டு. இங்கு வருகிறவர்களுக்கு உடனுக்குடன் பின்னலாடை நிறுவனங்களில் வேலையும் கிடைத்து விடும். இதனால் திருப்பூருக்கு தினமும் வேலை தேடி பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் வந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக வெளிமாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள் எல்லாம் பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். மற்ற நாட்களில் திருப்பூரில் தங்கியிருப்பார்கள்.
இந்நிலையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் பலரும் தங்களத சொந்த ஊர்களுக்கு சென்றனர். 5 நாட்கள் வரை தொடர் விடுமுறை என்பதால், தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதன் காரணமாக பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. இதுபோல் வெளியூர்களுக்கு சென்ற பலரும் தங்களது வாகனங்களை பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தி சென்றதால், வாகன நிறுத்தும் இடங்களும் நிரம்பி வழிந்தன. இதுபோல் வாகன நிறுத்தும் இடங்களில தரை தளம் சரியாக இல்லாமல் மண் தளமாக இருப்பதால், மழைக்காலங்களில் வாகனங்கள் பல சரிந்து கீழே விழும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தரைதளங்களை சீரமைத்து சரியான முறையில் வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.