உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் -அனுப்பட்டி கிராமமக்கள் அறிவிப்பு

Published On 2023-03-24 04:45 GMT   |   Update On 2023-03-24 04:45 GMT
  • கடந்த 16ந் தேதி பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
  • ஆலையின் எந்திர இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தாசில்தார் தெரிவித்தார்

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இம்மாத கடைசியில் அதன் உரிமம் முடிவடைவதாகவும், அதனை புதுப்பிக்க கூடாது என வலியுறுத்தி அனுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த16ந் தேதி பல்லடம் தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து அனுப்பட்டியில் கடந்த 8 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் கடந்த 22-ந் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அடிப்படையில், இரும்பு உருக்காலை உரிமத்தை நீட்டிப்பு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், மேலும் ஆலையின் எந்திர இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தாசில்தார் ஜெய்சிங் சிவகுமார் தெரிவித்தார்.இந்தநிலையில் அனுப்பட்டி கிராமத்தில் 8-வது நாளாக பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே அங்கு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த காத்திருப்பு போராட்டத்தில் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இரும்பு உருக்காலையை நிரந்தரமாக மூடும் வரை எங்களது காத்திருப்புப் போராட்டம் தொடரும் என அனுப்பட்டி கிராம மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News