பல்லடம் அருகே கொள்ளையன்களை பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்
- கோவில்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ் அவினாசிபாளையத்தில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
- ஒர்க்ஷாப்பில் கடந்த மாதம் 26-ந் தேதி 30 கிலோ இரும்பு திருட்டு போனது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 34). இவர் அவினாசிபாளையத்தில் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த மாதம் 26-ந் தேதி 30 கிலோ இரும்பு திருட்டு போனது. இதனைத்தொடர்ந்து அவர் சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தபோது 2பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று சி.சி.டி.வி. கேமராவில் காணப்பட்ட இருவரும் அவினாசிபாளையம் பகுதியில் சுற்றித்திரிந்ததை மகேஷ் கண்டுபிடித்தார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த இருவரையும் விரட்டி பிடித்தனர். பின்னர் இருவருக்கும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். மேலும் அவர்களில் ஒருவர் திருப்பூர் புதுரோட்டை சேர்ந்த சுப்பிரமணி மகன் சேகர் (43 ), மற்றொருவர் திருப்பூர் பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் ஆனந்த் (53) தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் போலீசார் அவர்கள் இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறி உள்ளனர்.
இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் அவர்கள் இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.