உள்ளூர் செய்திகள்

 உமா நந்தினி.

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் தேவாரம் பாடிய உடுமலை கல்லூரி மாணவிக்கு குவியும் பாராட்டுகள்

Published On 2023-06-01 07:16 GMT   |   Update On 2023-06-01 07:16 GMT
  • 18,326 பன்னிரு திருமுறை பாடல்களை பண்ணோடு தொடர்ந்து பாடி திருநெறிய தமிழரசி என்ற விருது பெற்றவர்.
  • தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாடு துறை சார்பில் கலை இளம்மணி விருது பெற்றுள்ளார்.

உடுமலை :

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா புதுடெல்லியில் நடந்தது. இதில் உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வரும் உமா நந்தினி என்ற மாணவி பங்கேற்றார். தேவார பண்ணிசை பாடுவதற்கு 6 ஓதுவார்களில் ஒருவராக திருவாடுதுறை ஆதீன குரு மகா சன்னிதானங்களில் வேண்டுகோளின்படி கலந்து கொண்டுள்ளார். இவர் தொடர்ந்து 665 நாட்களாக கொரோனா காலத்தில் 18,326 பன்னிரு திருமுறை பாடல்களை பண்ணோடு தொடர்ந்து பாடி நிறைவு செய்து திருநெறிய தமிழரசி என்ற விருது பெற்றவர்.

முதல் ஏழு திருமுறைகளைகளான திருவாசகம், திருக்கோவையார் ஒன்பதாம் திருமுறை, பத்தாம் திருமுறை திருமூலரின் திருமந்திரம், 11-ம் திருமுறை போன்றவற்றின் எல்லா பாடல்களையும் பாடி நிறைவு செய்து 12-ம் திருமுறை சேக்கிழார் பெருமானின் பெரிய புராணம் என மொத்தம் 18,326 பாடல்களையும் பாடி நிறைவு செய்துள்ளார்.

தொடர்ந்து அருணகிரிநாதரின் திருப்புகழ், திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திரு அருட்பா பாடல்களையும் யூடியூப் இணையதளத்தில் பாடி வருகிறார். இந்திய சாதனை புத்தகம், இளம் வயதில் அதிகமான ஆன்மிக பாடல்களை பாடியவர் என்று இவரது சாதனையை பதிவு செய்தது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் பண்பாடு துறை சார்பில் கலை இளம்மணி விருது பெற்றுள்ளார். திருவாடுதுறை ஆதீன பண்ணிசை வகுப்பு மாணவியான இவர் திருவாடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ 24 வது குரு மகா சன்னிதானங்களின் திருக்கரங்களால் சிறப்பு விருதும் ரூபாய் ஐந்தாயிரத்திற்கான பொற் காசுகளையும் பெற்றுள்ளார்.

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜனிடம் திருநெறிய அருள் செல்வி விருது அளித்து மாணவி உமா நந்தினியை கவுரவித்துள்ளார். உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவை சார்பில் தூண்டில் சிறந்த தூயோர் விருதும், அரிமா சங்கம் சார்பில் பாராட்டு சான்றிதழும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து கல்லூரி மாணவி உமா நந்தினி கூறியதாவது:-

உடுமலையிலுள்ள ஜி.வி.ஜி., விசாலாட்சி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது மழலைப் பருவம் முதலே கா்நாடக இசையை முறைப்படி கற்றறிந்துள்ளேன். நான் 6ம் வகுப்பு பயிலும்போது பன்னிசைப் பயிற்சியை உடுமலையிலுள்ள திருவாவடுதுறை ஆதீனம் பண்ணிசை பயிற்சி மையத்தில் அமைப்பாளா் ராணி கோபால்சாமியின் வழிகாட்டுதலின்படி, ஓதுவாா் சற்குருநாதனிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இதைத்தொடா்ந்து, கரூா், ஈரோடு மற்றும் உடுமலை பகுதிகளுக்கு பொறுப்பாளரான, திருவாவடுதுறை ஆதீன சைவ சித்தாந்த பேராசிரியரான ஜெய்சிங் லிங்க வாசகத்திடம் பண்ணிசை பாடல்களையும், திருநெறி முறைகளையும் கற்றுக்கொண்டேன். புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் தேவாரப்பண்ணிசை பாடுவதற்கு 6 ஓதுவாா்களில் ஒருவராக திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானங்களின் அருளாணையின்படி கலந்து கொண்டேன். இந்த சரித்திர நிகழ்வு எனக்கு பெரும் பேறாகவும், பெருமையாகவும் உள்ளது என்றாா்.

Tags:    

Similar News