கோடை காலத்தில் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை - அதிகாரிகள் தகவல்
- நீர் இருப்பு சதவீதம், 67.46 ஆகும்.
- வாய்க்கால் வாயிலாக ஏழு குளம் மற்றும் வலையபாளையம் குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
உடுமலை :
உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் வாயிலாக ஏழு குளம் மற்றும் வலையபாளையம் குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.ஏழு குளங்களில் பெரிய குளம் 404 ஏக்கர் பரப்பளவும், 11.55 அடி நீர்மட்ட உயரமும், 70.56 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும். தற்போதைய நிலவரப்படி இக்குளத்தில் 7.90 அடி நீர்மட்டமும், 47.60 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது. நீர் இருப்பு சதவீதம், 67.46 ஆகும்.
செங்குளம் 74.84 ஏக்கர் பரப்பளவில் 10 அடி நீர்மட்ட உயரமும், 12.74 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவும் கொண்டதாகும். இதில் 5.10 அடி நீர்மட்டமும், 5.08 மில்லியன் கனஅடி நீர்இருப்பும், நீர் இருப்பு சதவீதம் 39.87 என மிகவும் குறைவாக காணப்பட்டது. ஒட்டுக்குளம் 90 ஏக்கர் பரப்பளவில் 10 அடி நீர்மட்ட உயரம், 14.11 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும். இங்கு 7.00 அடி நீர்மட்டமும், 8.40 மில்லியன் கனஅடி நீர்இருப்பும், நீர்இருப்பு சதவீதம் 59.53 ஆக உள்ளது.செட்டிகுளம் 67.49 ஏக்கர் பரப்பளவில், 7.5 நீர்மட்ட உயரம், 7.93 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு கொண்டதாகும். இக்குளத்தில் 4.70 அடி நீர் மட்டமும், 4.06 மில்லியன் கனஅடி நீர்இருப்பும் உள்ளது. நீர்இருப்பு சதவீதம், 51.19 ஆகும். தினைக்குளம் 51.19 ஏக்கர் பரப்பளவில் 9.25 அடி நீர்மட்ட உயரம், நீர் கொள்ளளவு 7.23 மில்லியன் கனஅடியாகும். தற்போதைய நிலவரப்படி 8 அடி நீர்மட்டமும், 6.50 மில்லியன் கனஅடி நீர் இருப்பும், நீர்இருப்பு சதவீதம் 89.90 ஆக உள்ளது. கரிசல் குளம் 31.22 ஏக்கர் பரப்பளவு, 7.65 அடி நீர்மட்டம், 2.92 மில்லியன் கனஅடி நீர் இருப்பு கொண்டது. இங்கு 7 அடி நீர்மட்டமும், 2.60 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது. நீர்இருப்பு சதவீதம் 89.04 ஆகும். அம்மாபட்டி குளம் 31.22 ஏக்கர் பரப்பளவில், 4.50 அடி நீர்மட்டம், 1.76 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு உடையதாகும். 3.30 அடி நீர்மட்டமும், 1.56 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது. சதவீதம் 88.63 ஆகும். வலையபாளையம் குளம் 52.80 ஏக்கர் பரப்பளவில், 4.20 அடி நீர்மட்டமும், நீர் கொள்ளளவு 7.79 மில்லியன் கனஅடி உடையதாகும். இங்கு 4.20 அடி நீர்மட்டமும், 3.17 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் உள்ளது. நீர்இருப்பு சதவீதம் 40.69 ஆகும்.இக்குளங்களில் 75 சதவீதத்திற்கும் மேல் 3 குளங்களிலும் 50 சதவீதத்திற்கும் மேல் 3 குளங்களிலும் பாதிக்கும் குறைவாக 2 குளங்களிலும் நீர் இருப்பு உள்ளது.
கோடை காலம் முன்னதாகவே துவங்கியுள்ள நிலையில் உடுமலை பகுதியிலுள்ள குளங்களில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. குளங்கள் வழியாக 2,756 ஏக்கர் நிலங்களிலும், நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகக்கொண்டு பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன.இப்பகுதிகளில் கரும்பு, தென்னை, வாழை, காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில் கோடை காலத்தை சமாளிக்கும் வகையில் தேவையான நீர் இருப்பை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குளங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து நீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் வரை நீர் கொண்டு வரப்படும். விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும். நடப்பு கோடை காலத்தில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்றனர்.
உடுமலை பெரிய குளத்தில் பழங்காலத்தில் நீர் அளவீடு, நீர் தேங்கும் பரப்பிலுள்ள மகுளி எனப்படும் மண் சேருவதை தடுக்கும் வகையிலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன் நீர் நிர்வாகத்துக்காக குளத்தில், தூம்பு அமைக்கப்பட்டுள்ளது.இந்த தூம்பின் கீழ் மட்ட வழிந்தோடி வழியாக தண்ணீர் திறக்கும் போது மகுளி மண் தேங்காது.நூற்றாண்டுகள் பழமையான இந்த தூம்பு இப்பகுதி நீர் மேலாண்மையில் சிறப்பு பெற்றிருந்தது என்பதற்கான சாட்சியாக உள்ளது.நீர் இருப்பு இருக்கும் போது வெளியில் தெரியாது. தற்போது குளத்தில் நீர் இருப்பு குறைந்துள்ளதால் இது வெளியில் தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளாக தூம்பு வெளியில் தெரியாத அளவுக்கு கோடை காலத்திலும் நீர்மட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.