- நாடு முழுவதும் அரசு ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று வழங்கும் பணியை தபால் துறை மேற்கொண்டுள்ளது.
- அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையரிடம் நேரடியாகச்சென்று இச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
உடுமலை :
கிராம கோவில் பூசாரிகளுக்கு, தபால் நிலையம் வாயிலாக ஆயுள் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநிலத்தலைவர் வாசு கூறியதாவது:-
நாடு முழுவதும் அரசு ஓய்வூதியர்களுக்கு ஆயுள் சான்று வழங்கும் பணியை தபால் துறை மேற்கொண்டுள்ளது. தபால் நிலைய ஊழியர்கள், வீடு தேடிச்சென்று ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தி, ஓய்வூதியர்களின் ஆயுள் சான்றுகளை டிஜிட்டல் முறையில் வழங்கி வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், கிராமப்புற கோவில்களில் பணியாற்றி, 60 வயது கடந்த ஓய்வு பெற்ற பூசாரிகள், வங்கிகள் வாயிலாக ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.அரசு ஓய்வூதியர்களை போன்று, ஆண்டுதோறும் இவர்களும் ஆயுள் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
அதன்படி, அறநிலையத்துறை மாவட்ட உதவி ஆணையரிடம் நேரடியாகச்சென்று இச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.கிராமப்புறங்களில் வசிக்கும் வயதான பூசாரிகள், தொலைவில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்களுக்கு சென்று வருவது சிரமமானது.
இதுபோன்றவர்கள், ஆயுள் சான்று பெறுவது என்பது மிகுந்த சிரமமானது. எனவே அரசு ஓய்வூதியர்களை போன்றே கோவில் பூசாரிகளுக்கும் தபால் நிலையம் வாயிலாக, ஆயுள் சான்று கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.