சொத்து வரி விதிப்பு சீரமைப்பு கட்டிட உரிமையாளர்கள் சரி செய்து கொள்ள கால அவகாசம்
- கட்டிட உரிமையாளர்கள் தாமாக முன் வந்து அவற்றை சரி செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- அடுத்த கட்டமாக தனியார் நிறுவனம் மூலம் நேரடியாக கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வரி விதிப்பு செய்யப்படாத மற்றும் குறைந்த வரி விதிப்பு செய்த கட்டிட உரிமையாளர்கள் தாமாக முன் வந்து அவற்றை சரி செய்து கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேயர் தினேஷ்குமார் கூறியதாவது:-
மாநகராட்சி பகுதியில் வணிக மற்றும் தொழிற்சாலை கட்டிடங்கள் பெருமளவு உரிய வகையில் வரி விதிப்பு செய்யப்படாமல் உள்ளது. இதனால் நிர்வாகத்துக்கு உரிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது.ஏராளமான கட்டிடங்கள் குறைந்த வரி விதிப்பு செய்தும், வரி விதிப்பே செய்யாமலும் பயன்பாட்டில் உள்ளது. இரு வார்டுகளில் நடத்திய ஆய்வில் 309 சதவீதம் அளவு வரி விதிப்பில் முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது. வருவாய் பிரிவினருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தங்கள் பகுதியில் உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து இதனை சரி செய்து, முறையான வரி விதிப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டது. கால அவகாசம் இம்மாத இறுதி வரை வழங்கப்பட்டது. இந்த அவகாசம் வரும் செப்டம்பர் 15ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உரிமையாளர்கள் தாமாகவே முன் வந்து அதற்கு முன்னதாக உரிய வரிவிதிப்பு செய்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில், கடும் அபராதம் விதிக்கப்படும். முதல் கட்டமாக வணிக மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கான வரி விதிப்புகள் மீது இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பணிக்காக ஓராண்டுக்கும் மேலாக தற்காலிக மற்றும் வணிகரீதியான மின் இணைப்புகள் பெற்ற கட்டிடங்கள் குறித்த விவரங்கள் மின் வாரியம் மூலம் பெறப்பட்டுள்ளது.அடுத்த கட்டமாக தனியார் நிறுவனம் மூலம் நேரடியாக கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அதனடிப்படையில் அனைத்து கட்டிடங்களும் ஆய்வு செய்து வரி விதிப்புக்கு உட்படுத்தப்படும் என்றார்.