சுற்றுச்சூழலுக்கு தகுந்த முறையில் செயலாற்ற உள்ளாட்சி அலுவலர்களுக்கு பயிற்சி
- அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சார்பில், அனைத்து நிலை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அலுவலர்களுக்கு, ஆண்டுதோறும் புத்தாக்கப்பயிற்சி வழங்கப்படுகிறது.
- 12-ந்தேதி முதல், 14ந் தேதி வரை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செல்வதற்கான முயற்சி என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது.
திருப்பூர் :
சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது பெரும் சவாலாக மாறிவரும் நிலையில், உள்ளாட்சி நிர்வாகங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த பணிகளை மேற்கொள்ள அரசு ஊக்குவித்து வருகிறது.
சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி சார்பில், அனைத்து நிலை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அலுவலர்களுக்கு, ஆண்டுதோறும் புத்தாக்கப்பயிற்சி வழங்கப்படுகிறது.அதன்படி பேரூராட்சி அலுவலர்களுக்கு நாளை , 12-ந்தேதி முதல், 14ந் தேதி வரை சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செல்வதற்கான முயற்சி என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் குறிப்பிட்ட அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இப்பயிற்சியில் உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட இருக்கிறது.
உள்ளாட்சிகளில் மாசுபாடு குறைத்தல் தொடர்பான திட்டங்களை வகுப்பது, இயற்கை வளங்கள், காடுகளை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பது தொடர்பான திட்டங்களை வகுப்பது, அனைத்து உயிரினங்களும் அவற்றின் இயற்கையான வழித்தடங்களில் பயணிக்கவும், வாழவும் வழிகாட்டும் வகையிலான திட்டங்களை தீட்டுவது ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது.தவிர இயற்கை உரம் தயாரிப்பு, மாடித்தோட்டம், இயற்கை முறையில் சோப்பு தயாரிப்பது, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணி சார்ந்தும் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக திருப்பூர் மாவட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.