உடுமலை ஜல்லிப்பட்டி அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா
- முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஐம்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது
- 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
உடுமலை :
உடுமலை ஜல்லிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2001 ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஐம்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் மணிமேகலை தலைமை தாங்கினார். அப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மனோன்மணி, ராமலிங்கம், ஆறுமுகம் , பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கடந்த ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்ற பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சின்னராசு 2001 ம் ஆண்டு அப்பள்ளியிலேயேமாணவராக பயின்று இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
2021 -22 ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டது. மேலும் பள்ளியின் ஆய்வகத்துக்கு ரூ. 7 ஆயிரம் மதிப்பிலான மடிப்பு நுண்ணோக்கியும், நூலகத்திற்கு புத்தகங்களும் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி பூங்காவுக்காக பூச்செடிகள் நடவு செய்யப்பட்டது. அனைத்து முன்னாள் ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து பூச்செடிகளை நடவு செய்தனர். ஜல்லிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து முன்னாள் மாணவர் பேரவை அமைத்து பள்ளியின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக உதவி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ரஞ்சித், கோகிலாமணி, இளவரசன் ஆகியோர் செய்திருந்தனர்.