உடுமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு
- 14 இளநிலை பட்டப்படிப்புகளும் 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன.
- பொதுப்பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.
உடுமலை :
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் பொதுப்பிரிவு மாணவ- மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கீ.கல்யாணி கூறியதாவது:- உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 14 இளநிலை பட்டப்படிப்புகளும் 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன. இதில் 2023- 2024 ம் கல்வியாண்டிற்கு இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு துறை என மொத்தம் 21 பேர் சேர்ந்தனர். அதைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் பெற்ற தரவரிசைப்படி பொதுப்பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.
இதில் பிபிஏ., பாடப்பிரிவில் 10 மாணவர்களும்,பி.காம் பாடப்பிரிவில் 52 மாணவர்களும்,பி.காம்(சிஏ) பாடப்பிரிவில் 59 மாணவர்களும்,இ.காமர்ஸ் பாடப்பிரிவில் 11மாணவர்களும்,பொருளியல் பாடப்பிரிவில் 6 மாணவர்களும், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 2 மாணவர்களும் ஆக மொத்தம் 140 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர் .முதல் கட்ட கலந்தாய்வின் 3- ம் நாளான இன்று கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அறிவியல் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவர்கள் 10,11,12-ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் , மாற்று சான்றிதழ்,ஆதார் அட்டை,சாதிச்சான்றிதழ் ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 6 , இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல்,தரவரிசை நகல் , கல்லூரிக்கட்டணம் உள்ளிட்டவற்றை கொண்டு வரவேண்டும்.கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோருடன் வரவேண்டும்.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.