கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் - திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
- அணை, குளங்களில் நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
- கால இடைவெளியில் போதியளவு குடிநீர் வினியோகிக்க முடியாத நிலை ஏற்படும்.
திருப்பூர் :
கோடை முழுமையாக துவங்குவதற்கு முன்னரே, உடுமலை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இதனால் மற்ற பருவங்களை காட்டிலும் கோடை காலத்தில் நீரின் தேவை அதிகரிக்கும்.அதேநேரம் நிலத்தடி நீர்மட்டம் சரிந்தும், அணை, குளங்களில் நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.இதனால் பல்வேறு திட்டங்கள் வாயிலாக ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் போதியளவு குடிநீர் வினியோகிக்க முடியாத நிலை ஏற்படும்.அவ்வகையில் கோடை நெருங்கும் சூழலில், சவால்களை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் ஆயத்தப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், அமைச்சர் சாமிநாதன் தலைமையில் குடிநீர் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் வினியோகப்பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் புதிய குடிநீர் திட்ட பணிகளின் நிலை, கோடை கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.குழாய் உடைப்புகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளார்.