நிப்ட்-டீ கல்லூரியில் மாணவ-மாணவிகளுடன் மத்திய மந்திரி கலந்துரையாடல்
- திருப்பூர் ஒரு தனி நகரமாக இருந்து பெரும்பான்மையான அளவில் நிதியை பெற்றுத்தந்துள்ளது.
- என்.95 முககவசம் முதல் பல்வேறு மருத்துவ உபகரணங்களை உலக நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது
திருப்பூர் :
மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை மந்திரி கிஷன் ரெட்டி திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ பின்னலாடை கல்லூரியில் சுயசார்பு இந்தியா பற்றி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை கல்லூரி தலைவர் மோகன் வரவேற்றார். கல்லூரியின் முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகம், பொருளாளர் கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியில் மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை மந்திரி கிஷன் ரெட்டி பேசியதாவது:-
இந்திய பொருளாதார ஏற்றுமதியில் திருப்பூர் ஒரு தனி நகரமாக இருந்து பெரும்பான்மையான அளவில் நிதியை பெற்றுத்தந்துள்ளது. திருப்பூரில் உள்ள இளைஞர்கள் தொழில் அதிபர்களாகவும், தொழில் முனைவோராகவும் உள்ளனர். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளிக்கும் தீனதயாள் உபத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா திட்ட கிளை இந்திய அளவில் 79 இடங்களில் உள்ளன. அதில் ஒரு கிளை இங்கு செயல்படுவது பெருமையாக உள்ளது. அடல் இன்குபேஷன் சென்டர் செயல்படும் விதம் சிறப்பாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். கொரோனா காலத்தில் சுயசார்பு இந்தியா இயக்கத்தின் மூலம் சாதித்தது என்ன என்று கேள்வி கேட்ட மாணவிக்கு, என்.95 முககவசம் முதல் பல்வேறு மருத்துவ உபகரணங்களை உலக நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்தது என்று மந்திரி பதில் அளித்தார். முடிவில் கல்லூரி துணை தலைவர் பழனிசாமி நன்றி கூறினார். கல்லூரியின் நிர்வாக உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.