உள்ளூர் செய்திகள்

சந்தை வளாகத்திலேயே மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்துள்ள காய்கறி கழிவுகளை படத்தில் காணலாம்.

உடுமலை உழவர்சந்தையில் குவியும் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-06-07 04:42 GMT   |   Update On 2023-06-07 04:42 GMT
  • மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது.
  • காய்கறிகள், பழங்கள் அழுகி கடும் துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது

உடுமலை :

உடுமலை கபூர்கான் வீதியில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்பட்டு வருகின்ற உழவர் சந்தை உள்ளது.இந்த சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் காய்கறிகள், கீரைகள்,பழங்கள்,இளநீர் உள்ளிட்டவற்றை நாள்தோறும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி மலைப்பகுதியில் விளையக்கூடிய கேரட் ,பீன்ஸ், பட்டாணி, மேராக்காய்,உருளை மற்றும் சேனைக்கிழங்கு உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிகளின் நேரடி விற்பனை என்பதால் குறைவான விலையில் நிறைவான தரத்தில் புத்தம் புதிதாக காய்கறிகள் கிடைக்கிறது.இதனால் பொதுமக்கள் ஆர்வத்தோடு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். காய்கறிகள் வரத்தும் அதிக அளவில் இருப்பதால் அதற்கு தகுந்தாற்போல் கழிவுகளும் சேர்ந்து வருகிறது. அதை முறையாக அகற்றாமல் சந்தை வளாகத்திலேயே மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்து உள்ளனர்.இதன் காரணமாக காய்கறிகள்,பழங்கள் அழுகி கடும் துர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.இதனால் பொதுமக்கள் வியாபாரிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அன்றாட உணவில் காய்கறிகள் கீரைகளின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும். தற்போது வெப்பத்தின் தாக்குதல் அதிகமாக உள்ளதால் காய்கறிகள், கீரைகள் விரைவில் வாடி விடுகின்றது. இதனால் நாள்தோறும் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றோம். ஆனால் காய்கறி கழிவுகளை அகற்றாமல் சந்தை வளாகத்தின் நுழைவுப்பகுதியில் குவித்து வைத்து உள்ளனர். அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் சந்தையின் ஒரு பகுதியில் விவசாயிகள் கடை அமைக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். பொதுமக்களும் முழுமையான அளவில் காய்கறிகளை வாங்க முடிவதில்லை.அதிகாரிகளின் அலட்சியத்தால் சந்தையில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன் துர்நாற்றத்தால் பொதுமக்களுக்கும் உடல் ஒவ்வாமை ஏற்பட்டு வருகிறது.

எனவே உழவர் சந்தையில் தேங்கி வருகின்ற காய்கறி கழிவுகளை அகற்றுவதற்கு நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் நாள்தோறும் சந்தையில் சேகரமாகும் கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News