திருப்பூர் கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
- தங்களது குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பெற்றோர் கோவில்களுக்கு குழந்தையுடன் வந்தனர்
- வித்யாரம்பம் செய்து குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், ரப்பர் உள்ளிட்ட 11 பொருட்கள் கொண்ட கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் அய்யப்பன் கோவில், ஈஸ்வரன் கோவில், குருவாயூரப்பன் கோவில், வாலிபாளையம் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் எழுந்து நீராடி சுவாமி தரிசனம் செய்து, தங்களது குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பெற்றோர் கோவில்களுக்கு குழந்தையுடன் வந்தனர்.
குழந்தைகளுக்கு அர்ச்சகர்கள் தங்க வேலால் நாக்கில் எழுதி எழுத்தறிவித்தலை தொடங்கி வைத்தனர். அதுபோல் அரிசியிலும் குழந்தைகளின் கை விரல்களை பிடித்து எழுத வைத்தனர். அதன்பிறகு சிலேட்டுகளிலும் குழந்தைகள் எழுதினர். கோவில்களில் நடந்த நிகழ்ச்சியில், திரளான குழந்தைகள் பங்கேற்றனர். வித்யாரம்பம் செய்து குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில், ரப்பர் உள்ளிட்ட 11 பொருட்கள் கொண்ட கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
இதேபோல், திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளில் சிறப்பு மாணவர் சேர்க்கை (அட்மிஷன்) நடந்தது. ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்க்க, பெற்றோர்கள், ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.