திருப்பூரில் விஜயதசமியொட்டி கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது
- கல்வி, கலைகள் என எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது ஐதீகம்.
- என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அய்யப்பன் கோவில்களில் நடைபெறும்.
திருப்பூர் :
நவராத்திரி விழா கடந்த வாரம் தொடங்கியது. இதையட்டி பொதுமக்கள் கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தி வந்தனர். இந்நிலையில் நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமி இன்று கொண்டாடப்பட்டது. இந்த நாளில் கல்வி, கலைகள் என எது தொடங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது ஐதீகம். இதனால் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கும், பாட்டு, இசைக்கருவிகள், நடனம் ஆகிய பயிற்சிகள், பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்குவது வழக்கம். இதற்காக குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்னும் எழுத்து அறிவித்தல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அய்யப்பன் கோவில்களில் நடைபெறும். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இந்த நிகழ்ச்சி நடந்தது. காலை எழுந்து நீராடி சாமி தரிசனம் செய்து விட்டு பலரும் தங்களது குழந்தைகளுக்கு எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அய்யப்பன் கோவில்களுக்கு சென்றனர்.
திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் 9வது ஆண்டு எழுத்து அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை முதலே பெற்றோர்கள் பலரும் தங்களது குழந்தைகளுடன் வந்தனர். குழந்தைகளுக்கு அர்ச்சகர்கள் தங்க வேலால் நாக்கில் எழுதினர். அதுபோல் அரிசியிலும் எழுத வைத்து எழுத்து அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் சிலேட்டுகளிலும் குழந்தைகள் எழுதினர். தொடர்ந்து 9வது ஆண்டாக 1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வித்யாரம்பம் செய்து குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள், பென்சில், ரப்பர் உள்ளிட்ட 11 பொருட்கள் கொண்ட கல்வி உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது. இதனால் அய்யப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதியது. அதே போன்று திருப்பூர் வீரராகவப்பெருமாள் கோவில், ஈஸ்வன் கோவில், வாலிப்பளையம் முருகன் கோவல், மற்றும் கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் குவிந்தனர்.