அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு 12-ந்தேதி தண்ணீர் திறப்பு
- திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
- தற்போதைய நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 66.60 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.
உடுமலை
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.
அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வெப்ப சலனத்தின் காரணமாக அணையின் நீராதாரங்களில் கோடை மழை பெய்தது. நீர்வரத்து ஏற்பட்டு அணையின் நீர்இருப்பும் உயர்ந்தது. இதனால் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள பாசன நிலங்களுக்கு உரிய இடைவெளி விட்டு நீர் இருப்பு மற்றும் நீர் வரத்துக்கு ஏற்றவாறு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
தென்மேற்கு பருவமழையும் கைவிட்டதால் அணையில் நீர்இருப்பும் குறைவாக காணப்படுகிறது. இந்த நிலையில் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காகவும் கடந்த ஆகஸ்டு் மாதம் 10 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்படுவதால் வறட்சி அதிகரித்து உள்ளது. அதைத்தொடர்ந்து பழைய மற்றும் புதிய பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை காப்பாற்றவும் குடிநீர் தேவையை சமாளிப்பதற்கும் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். வருகிற 12-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு தண்ணீர் திறப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 66.60 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 119 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.