உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

நிலத்தடி நீர்மட்டம் உயர நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?விவசாயிகள் எதிர்பார்ப்பு

Published On 2022-08-17 07:41 GMT   |   Update On 2022-08-17 07:41 GMT
  • உயிரினங்கள் வசித்து வருதுடன் உழவுத் தொழிலும் நடைபெற்று வருகிறது.
  • ஆண்டுதோறும் பராமரிப்பு செய்து நீர்வரத்தை பெறுவதற்கு தயார்படுத்துவதில்லை.

உடுமலை :

நீராதாரங்கள் பராமரிப்பில் அக்கறை காட்டாததால் நீர் வழித்தடங்கள் குளம் குட்டை உள்ளிட்டவை நாளடைவில் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. இதனால் அடைமழை பெய்தாலும் அவை நீர்வரத்தை பெற முடியாத சூழல் நிலவுகிறது. அந்த வகையில் உடுமலை தளி பகுதியில் ஒரு சில நீராதாரங்களைத் தவிர மற்றவைகள் நீர் இருப்பை பெற முடியாமல் தவித்து வருகின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

நீராதாரங்களை மையமாகக் கொண்டு அனைத்து விதமான உயிரினங்கள் வசித்து வருதுடன் உழவுத் தொழிலும் நடைபெற்று வருகிறது. அவற்றை ஆண்டுதோறும் பராமரிப்பு செய்து நீர்வரத்தை பெறுவதற்கு தயார்படுத்துவதில்லை. இதனால் படிப்படியாக ஆக்கிரமிப்புக்கு உள்ளானதுடன் மண் சூழ்ந்து மேடாகி விட்டது. இதன் காரணமாக முழுமையான நீர் வரத்தை பெற முடியாமலும் அதையும் மீறி வெள்ளப்பெருக்கு நீராதாரத்தை அடைந்தால் வீணாகி வருவதும் தொடர்கதையாக உள்ளது. நீராதாரங்கள் பராமரிப்பில் முனைப்பு காட்டாததால் கடந்த ஒரு வாரமாக மழை பெய்தும் நீர்வரத்தை பெறாமல் குளம் குட்டைகள் தவித்து வருகிறது. இதனால் கிணறு ஆழ்குழாய் கிணறுகள் விரைவில் வறண்டுவிடுவதுடன் விவசாய தொழிலும் வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்ளும் சூழல் நிலவுகிறது.

விவசாயத் தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டு உள்ளது. எனவே அதிகாரிகள் தளிக்கு உட்பட்ட கிராமங்களில் அமைந்துள்ள நீராதாரங்கள் நீர்வழித்தடங்களை ஆய்வு செய்து அவற்றில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்வர வேண்டும். இதனால் மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்படுவதால் நிலத்தடி நீர் இருப்பு உயர்ந்து வருவதற்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு காரணமாக இருப்பதில் கிணறு, குளம், குட்டை, ஏரி, ஓடை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது. இவைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதாலும், சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்புகளாலும், கழிவுகள் கொட்டப்படுவதாலும் பாழாகி வருகிறது.குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீர் உப்பாறு ஓடை வழியாக செல்கிறது. இதனால் குடிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் காய்கறி, மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.

உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் இறுதியாக உப்பாறு அணைக்கு செல்கிறது . உப்பாறு அணை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. உப்பாறு ஓடை செல்லும் வழிகளில் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் ஆக்கிரமித்துள்ளன. சில இடங்களில் ஓடை தெரியாத அளவிற்கு சீமைகருவேல மரங்களாக காணப்படுகிறது. இதனால் மழைகாலங்களில் ஓடை வழியாக செல்லும் மழை நீர் வீணாகிறது. சீமை கருவேல மரங்கள் நிலத்தடி நீர்மட்டத்தை உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.

நீர்நிலைகளை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என அறிவித்துள்ள நிலையில் குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட உப்பாறு ஓடை பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.எனவே உப்பாறு ஓடையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள சீமை கருவேலமரங்களை மழைக்கு முன்பாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News