காங்கயம் பகுதியில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
- பல்லடத்தில் இருந்து கரூர் நோக்கி சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது.
- சரக்கு வேனும்-லாரியும் மோதியதில் 4பேர் பலியாகினர்.
காங்கயம் :
கரூரில் இருந்து நேற்று காலை அரசு பஸ் ஒன்று கோவை நோக்கி காங்கயம் வழியாக வந்து கொண்டிருந்தது. பஸ்சை கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த டிரைவர் சரவணபவன் (வயது 57) என்பவர் ஓட்டி வந்தார். இதேபோல் பல்லடத்தில் இருந்து கரூர் நோக்கி சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. இந்த வேனை பல்லடம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (35) என்பவர் ஓட்டிச்சென்றார்.
இந்த நிலையில் நேற்று மதியம் காங்கயம்- கரூர் சாலை, வீரணம்பாளையம் பிரிவு அருகே அரசு பஸ் வந்தபோது, எதிரே வந்த லாரியை முந்திக்கொண்டு வந்த சரக்கு வேன் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. அப்போது வேனுக்கு பின்னால் வந்த காரும் வேனின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேன் மற்றும் அரசு பஸ்ஸின் முன் பகுதிகள் சேதமடைந்தன.
இந்த விபத்தில் வேன் டிரைவர் விக்னேசுக்கு இடது கால் துண்டானது. அரசு பஸ் டிரைவர் சரவணபவன், கண்டக்டர் முருகேசன், பயணிகள் ரிதன்யா, தினேஷ், கணேஷ், சின்னதுரை உள்பட பயணிகள் 4 பேருக்கு படுகாயங்களும், 25-க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருப்பூர், ஈரோடு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட வேன் டிரைவர் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே நேற்று முன்தினம் காங்கயம் அருகே சரக்கு வேனும்-லாரியும் மோதியதில் 4பேர் பலியாகினர். 40 பேர் காயமடைந்தனர். நேற்று மற்றொரு விபத்தில் வேன் டிரைவர் பலியான நிலையில், பஸ்பயணிகள் 25 பேர் காயமடைந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.