காங்கயம் வழியாக இயக்கப்பட்ட திருப்பூர்-திருச்செந்தூர் பஸ் மீண்டும் இயக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
- 12 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வந்தது.
- திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
காங்கயம் :
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும், அங்கிருந்து வருவதற்கும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தென் மாவட்டங்களுக்கு இரவு நேரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பூரில் இருந்து நல்லூர், படியூர், காங்கயம், ஊதியூர், தாராபுரம், தொப்பம்பட்டி, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை வழியாக திருச்செந்தூருக்கு அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டு வந்தது. 12 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வந்த இந்த பஸ் மூலம் காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தென் மாவட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் பயன்பெற்று வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே பொதுமக்கள், தொழிலாளர்கள் நலன் கருதி மீண்டும் காங்கயம் வழி திருப்பூர்-திருச்செந்தூர் பஸ்சை இயக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.