பசு மாடுகளை திருடிய வழக்கில் வாலிபர் கைது
- காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
- தளவாடப் பொருட்களில் இருந்த 20 அடி நீளமுள்ள 37 இரும்பு குழாய்கள் காணாமல் போனது.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பருவாய் கிராமம் பட்டணத்தான் தோட்டத்தைச் சேர்ந்த கவின் குமார் என்பவர் பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் வைத்திருந்த 2 பசு மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கவின் குமார் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில்,பருவாய்ஊராட்சி இடையர்பாளையம் கிராமத்தில் திருப்பதி கார்டன் பகுதியில், சதீஷ் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறார். இதற்கான தளவாடப் பொருட்களை வீட்டின் முன்பு போட்டுள்ளார். இந்த நிலையில் தளவாடப் பொருட்களில் இருந்த 20 அடி நீளமுள்ள 37 இரும்பு குழாய்கள் காணாமல் போனது.இதுகுறித்து சதீஷ் காமநாயக்கன்பாளையம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள கரடிவாவி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது, அந்த வழியே வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அவரை பிடித்த போலீசார், காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது, பசுமாடுகள் மற்றும் இரும்பு கம்பிகளை அவர் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் மேலும் விசாரணை செய்த போது அவர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாதாளமுருகன் மகன் பார்த்திபன்(வயது 25) என்பதும் தற்போது கோவை மாவட்டம் சிங்காநல்லூரில், இரும்பு ஆலையில் பணிபுரிந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 2 பசுமாடுகள் மற்றும் 37 இரும்பு கம்பிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.