உள்ளூர் செய்திகள்

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் போராட்டம்

Published On 2023-05-09 07:24 GMT   |   Update On 2023-05-09 07:24 GMT
  • கைது செய்தவர்களை விடுக்கவும் கோரிக்கை வைத்தனர்
  • போலீசார் கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்தவர்களை விடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.

திருவண்ணாமலை ஒன்றியம் உள்ள தேவனந்தல் ஊராட்சியில் புனல்காடு அருகில் உள்ள மலையை ஒட்டிய 5 ஏக்கர் இடத்தில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதற்கு அருகில் உள்ள புனல்காடு, கலர்கொட்டாய், ஆடையூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள் சங்கத்தினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் ஆதரவாக செயல்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி அந்த குப்பை கிடக்கில் குப்பை கொட்ட சென்ற லாரி டிரைவர் சிலர் தாக்கியதாகவும், பேச்சுவார்த்தைக்கு சென்ற திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதேவ்ஆனந்தை போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், புதியதாக அமைக்கப்பட்டு வரும் குப்பை கிடங்கை சுற்றி அளவீடு நடப்பட்ட கற்களை சிலர் உடைத்தாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் கொடுத்த புகாரின் திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் அதன் பேரில் போலீசார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 14 பேரும் தலைமறைவாக உள்ளனர்.

அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். அதை தொடர்ந்து நேற்று மாலையில் குப்பை கிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வழக்குப்பதிவு செய்து உள்ள 20 பேரின் குடும்பத்தினரும் என சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் போர்ட்டிகோவில் அமர்ந்து பெண்கள் ஒன்றிணைந்து ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள் தரையில் படுத்து கொண்டு கைது செய்தவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், புனல்காடு மலை அடிவாரத்தில் குப்பை கிடங்கு அமைக்க கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த போராட்டம் இரவு வரை நீடித்தது.

பின்னர் அவர்களில் சிலரை போலீசார் கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் கலெக்டர் முருகேஷை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மனுவை பெற்று கொண்ட அவர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News