தொழிலாளியிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் திருட்டு
- வங்கி அதிகாரி பேசுவதாக கூறி மோசடி
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
செங்கம் தாலுகா கல்லரைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வரதன் மகன் சுரேஷ். இவர் நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கூலி வேலை செய்து வருகிறேன். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளேன். கடந்த 23-ந் தேதி மாலையில் எனது செல்போனுக்கு வங்கியில் இருந்த அதிகாரி பேசுவதாக கூறி உனது ஏ.டி.எம். கார்டு தேதி முடிவடையும் நிலையில் உள்ளது. புதியதாக கார்டு பெற வேண்டும். அதற்கு உங்கள் ஏ.டி.எம். கார்டின் பின்புறம் உள்ள குறியீடு எண்ணை கொடுக்குமாறு கேட்டார். நானும் அவர் கூறியதை உண்மை என்று நம்பி எனது ஏ.டி.எம். கார்டு பின்புறம் உள்ள குறியீடு எண்ணை அவருக்கு கொடுத்தேன்.
அதன்பிறகு அவர் எனது செல்போனுக்கு தகவல் வரும். அந்த குறியீடு எண்ணை கூறுமாறு சொன்னார்.
அவர் கூறியவாறே நான் அந்த எண்ணை அவரிடம் கூறினேன். அப்போது எனது வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் தொகை இருப்பு இருந்தது.
அதன்பிறகு சில நாட்கள் கழித்து நேற்றுமுன்தினம் நடமாடும் ஏ.டி.எம். வங்கி அலுவலரிடம் எனது ஆதார் எண்ணை வைத்து பணம் எடுக்க முயன்ற போது வங்கி கணக்கில் பணம் இல்லை என தகவல் சொன்னார்.
இது குறித்து நேற்று தேவனாம்பட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று கிளை மேலாளரை சந்தித்து விவரம் கூறிய போது எனது வங்கி கணக்கு ஸ்டேட் மெண்டடை என்னிடம் கொடுத்து போலீசில் புகார் அளிக்க கூறினார்.
எனவே இந்த புகார் மனுவினை பரிசீலித்து எழுத படிக்க தெரியாத என்னை ஏமாற்றி எனது வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணத்தை எடுத்த நபர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.