செங்கம் ராஜவீதியில் கடைகள் முன்பு நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
- இருபுறமும் 5 அடி முதல் 10 அடி வரை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளது.
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
செங்கம்:
செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட ராஜவீதியில் சாலையின் இருபுறமும் கடைகள்ஆக்கிரமிப்பு செய்து வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
செங்கம் பேரூராட்சிக்குட்பட்ட ராஜவீதி நகரின் முதன்மை தெருவாகும். இந்த தெருவில் கடைகள், வங்கி உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகிறது. ராஜவீதி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நூலகம், பேரூராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் செல்லும் முதன்மை வழியாக உள்ளது.
இந்நிலையில் சார்பதிவாளர் அலுவலகம் முதல் செங்கம் பேரூராட்சி அலுவலகம் வரை சாலையின் இருபுறமும் 5 அடி முதல் 10 அடி வரை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சாலையிலேயே இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவைகளை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் காலை, மாலை அலுவலக நேரம் உள்பட அவ்வபோது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் பள்ளிப் பஸ், கல்லூரி பஸ்கள், சரக்கு வாகனங்கள் அடிக்கடி இந்த தெருவை பயன்படுத்தி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அதுபோன்ற சமயங்களில் சாலையை ஆக்கிரமித்து உள்ள கடைகள் மற்றும் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சார்பதிவாளர் அலுவலக சந்திப்பு முதல் ராஜவீதி பேரூராட்சி அலுவலகம் வரை சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையில் வாகனங்களை நிறுத்தி செல்வோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் எனவும் அப்பகுதி வாசிகள், சமூக ஆர்வலர்கள் தரப்பில் பேரூராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு, காவல்துறைக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.