உள்ளூர் செய்திகள்

பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி மீண்டும் நடைமுறை- அறிவொளியை நியமித்து அரசு உத்தரவு

Published On 2023-06-06 03:20 GMT   |   Update On 2023-06-06 03:20 GMT
  • கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி முடிவுக்கு வந்தது.
  • இயக்குனர் பதவி அகற்றப்பட்டு, பள்ளிக்கல்வி ஆணையரே பள்ளிக்கல்வி சார்ந்த பணிகளை கவனித்து வந்தார்.

சென்னை:

மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கல்வி சார்ந்த தேவைகளை பள்ளிக்கல்வி இயக்குனர் என்ற பதவியில் இருப்பவரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அவர் அரசிடம் தெரிவிப்பார். பின்னர் அது நிவர்த்தி செய்யப்பட்டு வந்தது.

100 ஆண்டுகளுக்கு மேலான வரலாறை கொண்டது இந்த இயக்குனர் பதவி. கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. இந்த பதவி உருவாக்கப்பட்டது, இயக்குனர் பதவியை அகற்றுவதற்காக தான் என்று அப்போது பேசப்பட்டது.

அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி முடிவுக்கு வந்தது. அதற்கு பதிலாக பள்ளிக்கல்வி ஆணையர் பொறுப்பில் இருப்பவர், அனைத்து பணிகளையும் கவனிப்பார் என்று கூறப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள், ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும், இயக்குனர் பதவி அகற்றப்பட்டு, பள்ளிக்கல்வி ஆணையரே பள்ளிக்கல்வி சார்ந்த பணிகளை கவனித்து வந்தார். இந்த பதவியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி நந்தகுமார் இருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் (மே) பள்ளிக்கல்வி ஆணையராக இருந்த நந்தகுமாரை, மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த அறிவிப்பில் பள்ளிக்கல்வி ஆணையராக யாரையும் நியமிக்காமல் விட்டுவிட்டது. இதனால் மீண்டும் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் பதவி கொண்டுவரப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக பேசப்பட்டது.

இதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில், சென்னை தலைமை செயலகத்தில் சமீபத்தில் நிருபர்களை சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி தொடர்பாக கேள்வி எழுப்பும்போது, 'இதுதொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நாங்கள் கொடுக்கும் பட்டியலில் அவர் யார் ஒருவரை தேர்வு செய்கிறாரோ? அவர்களை அறிவிப்போம்' என்றார்.

அதன்படி, பள்ளிக்கல்வி இயக்குனராக அறிவொளியை தேர்வு செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை நேற்று வெளியிட்டு இருக்கிறது. அறிவொளி இதற்கு முன்பு தொடக்க கல்வி இயக்குனராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராகவும், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 100 ஆண்டுகள் வரலாறு கொண்ட பள்ளிக் கல்வி இயக்குனர் பதவி 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைமுறைக்கு வந்து உள்ளது.

அத்துடன் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கூடுதல் இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராகவும், தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழக உறுப்பினர் செயலர் ச.கண்ணப்பன், தொடக்கக்கல்வி இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

அதேபோல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் மு.பழனிச்சாமி, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனராகவும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் பெ.குப்புசாமி, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழக உறுப்பினர் செயலாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News