உள்ளூர் செய்திகள்

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2023-06-11 02:04 GMT   |   Update On 2023-06-11 02:04 GMT
  • தமிழ்நாட்டில் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது.
  • நகரின் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை :

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மிக தீவிர புயலாக நிலவிய 'பிப்பர்ஜாய்' வடக்கு திசையில் நகர்ந்து நேற்று கோவாவில் இருந்து மேற்கு, வடமேற்கு திசையில் 700 கி.மீ. தொலைவிலும், மும்பையில் இருந்து மேற்கு, தென்மேற்கு திசையில் சுமார் 620 கி.மீ. தொலைவிலும், குஜராத் போர்பந்தரில் இருந்து தென், தென்மேற்கு திசையில் சுமார் 600 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டது.

இந்த புயல் மேலும் வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வடக்கு, வடகிழக்கு திசையை நோக்கியும், அடுத்த 3 தினங்களில் வடக்கு, வடமேற்கு திசையை நோக்கியும் நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த நிலையில் மேற்கு திசையின் காற்று, வெப்ப சலனம் ஆகிய காரணங்களால் தமிழ்நாட்டில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

11-ந் தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12-ந் தேதி (நாளை) முதல் 14-ந் தேதி (புதன்கிழமை) வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு (இன்று) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 6 செ.மீ. மழையும், வேலூரில் 5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரம், காட்பாடி, குடியாத்தம், மேலாளத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், சின்கோனா, சோலையார், ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை, பூண்டி, செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம், நீலகிரி மாவட்டம் பில்லிமலை எஸ்டேட், காஞ்சீபுரம் மாவட்டம் காட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது.

சென்னையில் நேற்று பகல் வேளையில் வெயில் கொளுத்தினாலும், மாலை வேளையில் இதமான வானிலை நிலவியது. கருமேகங்கள் தென்பட்டது. எனவே மிதமான மழை வரும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் லேசான துளிகள் மட்டும் விழுந்தது. பெரிய மழை பெய்யவில்லை.

தற்போது 'பிப்பர்ஜாய்' புயல் மையம் கொண்டுள்ள கடல் பகுதிகளில் சூறாவளி காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் இந்த கடற்கரை பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், அரபிக்கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News