விலை சரிவால் வீதியில் கொட்டப்பட்ட தக்காளி: விவசாயிகள் வேதனை
- வரத்து அதிகரிப்பால் விலை கடுமையாக குறைந்துள்ளது.
- ஒருகிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பழனி:
பழனியை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர்.
இங்கு விளையும் தக்காளிகளை பழனி தக்காளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தினசரி டன் கணக்கில் தக்காளி மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.
கடந்த மாதம் வரத்து குறைவால் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு மேல் விற்பனையானது. கடந்த வாரம் சற்று விலை குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விலை கடுமையாக சரிந்துள்ளது. 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.100 முதல் ரூ.200 வரை மட்டுமே விலை கேட்கப்படுகிறது.
மொத்த விற்பனையில் ஒருகிலோ தக்காளி ரூ.8 முதல் ரூ.15 வரையே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பறிப்பு செலவுக்குகூட பணம் கிடைக்காமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விலை கிடைக்காத விரக்தியில் தக்காளிகளை குப்பையில் வீசி செல்கின்றனர். அந்த தக்காளிகள் மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு இரையாகி வருகிறது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பழனியை சுற்றியுள்ள நெய்க்காரப்பட்டி, அய்யம்பா ளையம், வாடிப்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு தக்காளி விளைச்சல் உள்ளது. இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து விலை கடுமையாக குறைந்துள்ளது. இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் என்றனர்.