பல் பிடுங்கிய விவகாரம்- 15 காவலர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை
- அயன் சிங்கம்பட்டி ஊரின் எல்லையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை உடைத்ததாக சூர்யா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
- சூர்யா பல் பிடுங்கப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உட்கோட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களை பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயன் சிங்கம்பட்டி ஊரின் எல்லையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை உடைத்ததாக அதே ஊரை சேர்ந்த சூர்யா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான சூர்யா பல் பிடுங்கப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங், இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி, காவலர்கள் ராமலிங்கம், ஜோசப் ஆகியோர் பெயர் சேர்த்து உள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். சூர்யாவை கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போது பணியில் இருந்த 15 போலீசார் நெல்லையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் துருவி, துருவி விசாரணை நடத்தினார்.
பின்னர் அவர்கள் வாக்குமூலத்தை பதிவு செய்தார். தொடர்ந்து விக்கிரமசிங்கபுரம் போலீசாரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.