உள்ளூர் செய்திகள் (District)

குமரியில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

Published On 2024-10-25 04:17 GMT   |   Update On 2024-10-25 04:17 GMT
  • பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
  • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது.

இந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமாகவே காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது.

மாவட்டம் முழுவதும் இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை கொட்டி தீர்த்ததையடுத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கலெக்டர் அழகுமீனா வெளியிட்டார். தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மலையோர கிராமங்களில் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மோதிரமலை, கல்லாறு, கிழவி ஆறு, குற்றியாறு பகுதிகளில் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மலையோர கிராமங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மலையோர கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.


நாகர்கோவிலிலும் நேற்று இரவு பொய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது. காலையிலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் அசம்புரோடு, கோட்டார் சாலை, மீனாட்சிபுரம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். கனமழையின் காரணமாக நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தக்கலை, கோழிப்போர்விளை, குருந்தன்கோடு, இரணியல், குளச்சல், மயிலாடி பகுதிகளில் நேற்று இரவு மிக கனமழை பெய்துள்ளது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 110.6 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. கொட்டாரம், பூதப்பாண்டி, இரணியல், களியல், குழித்துறை, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டித்தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளில் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்ததால் உபரிநீர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு ரம்மியமான சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். வேர்கிளம்பி, குலசேகரம், கருங்கல் பகுதியில் கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கோதை ஆறு, குழித்துறை ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை தடுப்பணையை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரியிலும் நேற்று இரவு முதலே மழை பெய்து வருகிறது. இன்று காலையில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சுற்றுலா பயணிகள் லாட்ஜிலேயே முடங்கி கிடந்தனர்.

பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.51 அடியாக உள்ளது. அணைக்கு 623 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 455 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64.66 அடியாக உள்ளது. அணைக்கு 685 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 310 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 28.8, பெருஞ்சாணி 55.6, சிற்றாறு 1-23.2, சிற்றாறு 2-24.6, கொட்டாரம் 16.2, மைலாடி 65.2, நாகர்கோவில் 52, கன்னிமார் 19.6, ஆரல்வாய்மொழி 15, பூதப்பாண்டி 62.6, முக்கடல் 30.5, பாலமோர் 59.2, தக்கலை 16.4, குளச்சல் 76, இரணியல் 98.6, அடையாமடை 62.2, குருந்தன்கோடு 72.6, கோழிப்போர்விளை 110.6, மாம்பழத்துறையாறு 59.6, ஆணை கிடங்கு 59.2, களியல் 32.6, குழித்துறை 28.2, புத்தன் அணை 54.2, சுருளோடு 51.4, திற்பரப்பு 39.2, முள்ளங்கினாவிளை 48.4.

Tags:    

Similar News