கடலூரில் சூறைக்காற்று-இடி மின்னலுடன் விடிய, விடிய கனமழை
- நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.
- இரவு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசி மழை பெய்து வந்தது. நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை முதல் லேசான மழை தொடங்கிய நிலையில் இரவு பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழை இன்று அதிகாலை வரை விடிய, விடிய பெய்தது.
மேலும், மழை பெய்ய தொடங்கிய போது பலத்த காற்று வீசியதால் கடலூர் அடுத்த வழிசோதனை பாளையம், ராமாபுரம், புதுக்கு குப்பம், சின்னதானாங்குப்பம் புலியூர், சமிட்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தில் சுமார் 1500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன.
இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், திடீர் காற்றுடன் கூடிய மழையால் வாழைமரங்கள் முறிந்து சாய்ந்தன. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்து வந்த வாழைத்தார்கள் வீணாகிப்போனது.
இதன் காரணமாக ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் முதல் 1.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உரிய முறையில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறினார்.
மேலும், கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மழை நீர் தேங்கி தற்போது குலம் போல் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள் திரும்பி சென்றனர். மேலும், மாணவர்களும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளவில்லை. இது மட்டுமின்றி கடலூர் சாலைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. தொடர் மழை காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு:-
கடலூர்-79.2
வானமாதேவி-72.8
கலெக்டர் அலுவலகம்-62.6
வேப்பூர்-53.0
பண்ருட்டி-49.0
எஸ்.ஆர்.சி. குடிதாங்கி-46.0
குப்பநத்தம்-32.8
விருத்தாசலம்-32.0
கீழச்செருவாய்-30.0
காட்டுமயிலூர்-20.0
வடக்குத்து-16.0
குறிஞ்சிப்பாடி-15.0
தொழுதூர்-13.0
ஸ்ரீமுஷ்ணம்-10.0
மீ-மாத்தூர்-10.0
பெல்லாந்துறை-8.4
சேத்தியாதோப்பு-7.4
லக்கூர்-6.4
கொத்தவாச்சேரி-6.0
பரங்கிப்பேட்டை-5.9
லால்பேட்டை-4.0
காட்டுமன்னார்கோயில்-2.4
சிதம்பரம்-2.0
அண்ணாமலைநகர்-1.6
புவனகிரி-1.0
என கடலூர் மாவட்டத்தில் 586.50 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.