மேலூர் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து ஒருவர் பலி,10 பேர் படுகாயம்
- வேளாங்கண்ணியில் தரிசனத்தை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
- வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
மேலூர்:
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிலர் வேனில் ஆன்மிக சுற்றுலா சென்றனர். இவர்கள் வேளாங்கண்ணியில் தரிசனத்தை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த மேலூர் அருகே தும்பைப்பட்டி பகுதியில் நான்கு வழிச்சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த குமரி மாவட்டம் களியாக்க விளையைச் சேர்ந்த பயணி ஜஸ்டஸ் (வயது 40) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் வேனின் இடிபாடுகளில் சிக்கி ஸ்மைலா (21), லேடிங் ஜான் (43), ஜல்சா மேரி(43), ராஜகுமாரி (43) உள்பட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்த மேலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார், நெடுஞ்சாலை ரோந்து படை அதிகாரி கார்த்திகேயன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர்.
அவர்களால் மீட்க இயலாமல் போகவே உடனடியாக மேலூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த ஜஸ்டஸ் உடல் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள மார்ச்சுவரியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.