உள்ளூர் செய்திகள்

கோவை குற்றாலத்தில் குடும்பத்துடன் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2023-01-18 09:32 GMT   |   Update On 2023-01-18 09:32 GMT
  • அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
  • வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வடவள்ளி,

கோவை மாவட்டம் மேற்கு மலை தொடர்ச்சி போளுவாம்பட்டி வனச்சரகத்தில் உள்ளது கோவை குற்றாலம்.

கோவை மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமாக இது உள்ளது. பொங்கல் விடுமுறை நாட்களில் கோவை குற்றலாத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாகவே இருந்தது.

தற்போது பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கடந்த 14-ந் தேதியில் இருந்தே கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தின் பிற மாவட்டங்களான சென்னை, திருச்சி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினருடன் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கோவை குற்றாலத்திற்கு வந்தனர்.

நேற்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோவை குற்றாலத்திற்கு வந்தனர். இதன் காரணமாக சின்னார் சோதனை சாவடி முதல் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் சின்னார் சோதனை சாவடியில் நுழைவுச்சீட்டு வாங்குவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசயைில் காத்திருந்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்று, அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

இதற்கிடையே கூட்டம் அதிகரித்ததால் 2 மணிக்கே நுழைவு சீட்டு கொடுப்பதை வனத்துறையினர் நிறுத்தி விட்டனர். இதனால் கோவை குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பொள்ளாச்சி ஆழியார் அணை அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியில் குளித்து குதுகலமிட்டனர். சுற்றுலா பயணிகள் வருகையால் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News