உள்ளூர் செய்திகள் (District)

கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

Published On 2024-06-02 04:50 GMT   |   Update On 2024-06-02 04:50 GMT
  • வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
  • வியாபாரிகள் உள்பட சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

மே மாதத்தில் அக்னிநட்சத்திரத்தின் போது அதிக அளவு மழைப்பொழிவு இருந்தது. மேலும் கொடைக்கானலுக்கு வர சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது. மேலும் கோடை விழா மலர் கண்காட்சியிலும் குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் மலர்களை கண்டு ரசித்தனர்.

இருந்தபோதும் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அதிக அளவு வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வருகிற 6ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் 10ந் தேதிக்கு பள்ளிகள் திறப்பை தள்ளி வைப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்தது.


தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது. முக்கிய சுற்றுலா இடங்களான மோயர் சதுக்கம், குணா குகை, பைன் பாரஸ்ட், தூண்பாறை, கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

இருந்தபோதிலும் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை உள்ளிட்ட இடங்களில் தற்போது இதமான சீதோசனம் நிலவி வருகிறது. எனவே சுற்றுலா பயணிகள் அங்கும் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

இதனால் வியாபாரிகள் உள்பட சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News