சுதந்திர தினத்தை முன்னிட்டு மேட்டூர் அணை, பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேட்டூர் அணையை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள், அணை கரை பகுதியில் கூடினர்.
- இதேபோல் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது.
சேலம்:
காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது. 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்வதையும், காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண்பதற்காக தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேட்டூர் அணையை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள், அணை கரை பகுதியில் கூடினர். அவர்கள் மதகுகள் வழியாக சீறிப்பாயும் தண்ணீரை பார்த்தனர். பல ஏக்கர் பரப்பளவிலான அணை பூங்காவிலும் பொதுமக்கள் குவிந்தனர்.
இதேபோல் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது. அந்த வகையில் மேட்டூர் அணை பூங்காவுக்கு 20 ஆயிரத்து 656 பேரும், அணையின் வலது கரை பகுதியில் உள்ள பவளவிழா கோபுரத்துக்கு 2694 பேரும் வந்து சென்றனர். இதனால் நுழைவு கட்டணம் மூலம் அரசுக்கு 1 லட்சத்து 16 ஆயிரத்து 750 ரூபாய் வருமானம் கிடைத்தது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வழக்கத்தை விட கூடுதலான போலீசார், அணை மற்றும் பூங்கா பகுதியில் பாதுகாப்பு பணி–யில் ஈடுபட்டு வருகின்றனர்.