உள்ளூர் செய்திகள்

தேர்வு விடுமுறையால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Published On 2024-09-29 04:24 GMT   |   Update On 2024-09-29 04:24 GMT
  • காலையிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
  • படகு இல்லம் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது.

ஏற்காடு:

ஏற்காட்டில் நிலவி வரும் குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கிறார்கள்.

குறிப்பாக அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடந்ததால் சுற்றுலாப் பயணிகள் இன்றி ஏற்காடு வெறிச்சோடியது.

இதற்கிடையே தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் காலையிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

அவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களான லேடிஸ் சீட், அண்ணாபூங்கா, ஏரிபூங்கா, ஐந்திணை பூங்கா, பொட்டானிக்கல் கார்டன், பக்கோடா பாயிண்ட் போன்ற இடங்களை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். மேலும் படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய நீண்ட நேரம் காத்திருந்தனர்.

காலை நேரத்திலேயே படகு இல்லம் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக மலைப்பாதை, ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா சாலையில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News