கோவை நகரில் நாளை போக்குவரத்து மாற்றம்
- கோனியம்மன் கோவில் தேரோட்டம்
- போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவை,
கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆணடுக்கான திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
தேர் முகூர்த்தக்கால் நடும் விழா கடந்த மாதம் 23-ந் தேதி நடந்தது.
இதனை தொடர்ந்து கடந்த 14-ம் தேதி பூச்சாட்டு விழாவுடன் திருவிழா தொடங்கியது.
20-ந் தேதி கிராம சாந்தி, 21-ந் தேதி கொடியேற்றம், அக்னிசாட்டு நடந்தது. தினமும் பெண்கள் கொடி கம்பத்திற்கு நீரூற்றி வழிபட்டு வருகின்றனர்.
திருவிழா நாட்களில் தினமும் அம்மன் புலிவாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகன திருவீதி உலா நடந்தது.
இன்று மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (1-ந் தேதி) நடக்கிறது. பிற்பகல் 2.05 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. ராஜ வீதி தேர் திடலில் இருந்து புறப்படும் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் திடலை அடையும். மார்ச் 3-ல் தெப்பத்திருவிழாவும், 4-ந் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது.
மார்ச் 6-ந் தேதி நடக்கும் வசந்த விழாவுடன் கோனியம்மன் கோவில் திருவிழா நிறைவடைகிறது.
கோனியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை (1-ந் தேதி) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை உக்கடம், பேரூர், ராஜவீதி, வைசியாள் வீதி, சுக்கிரவார் பேட்டை, தெலுங்கு வீதி.
செட்டி வீதி, சலிவன் வீதிக ளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பேரூரில் இருந்து செட்டி வீதி, ராஜவீதி வழியாக நகருக்குள் வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. பேரூரில் இருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மாநகராட்சி பள்ளி அருகே வலதுபுறம் திரும்பி அசோக் நகர் ரவுண்டானா வழியாக பேரூர் பைபாஸ் ரோடு வழியாக செல்லலாம்.
வைசியாள் வீதி, செட்டி வீதி வழியாக பேரூர் செல்லும் வாகனங்கள் உக்கடம் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா, சேத்து மாவாய்க்கால் செக்போஸ்ட், சிவாலயா சந்திப்பு வழியாக பேரூர் சாலையை அடையலாம்.
மருதமலை தடாகம் சாலையில் இருந்து தெலுங்கு வீதி வழியாக வாகனங்கள் வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. மருதமலை தடாகம் சாலையில் இருந்து காந்திபார்க், பொன்னைய ராஜபுரம், சொக்கம்புதூர், ராமமூர்த்தி சாலை, சிவாலயா சந்திப்பு, செல்வபுரம் மாநகராட்சி பள்ளி, அசோக் நகர் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும்.
உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி வழியாக, தடாகம் ரோடு, மருதமலை, மேட்டுப்பாளையம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு, அசோக் நகர் ரவுண்டானா வழியாக காந்திபார்க் சென்று செல்ல வேண்டும்.
கனரக வாகனங்கள் நகருக்குள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர் திருவிழா நடைபெறும் வீதிகளான ராஜவீதி, ஒப் பணக்கார வீதி, வைசியாள் வீதி, கே.ஜி. வீதி ஆகிய சாலைகளில் வாகனம் நிறுத்த அனுமதியில்லை.
இருசக்கர வாகனங்களை ராஜவீதி மாநகராட்சி வாகன நிறுத்தும் இடத்திலும், நான்கு சக்கர வாகனங்களை உக்கடம் போலீஸ் நிலையத்திற்கு எதிரே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்திற்கு கீழே உள்ள காலியிடத்தில் நிறுத்திக் கொள்ளலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.