தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு பயிற்சி
- சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது
- இப்பயிற்சியில் தேனி மாவட்ட எஸ்.பி போலீசாருக்கு பல்வேறு செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.
தேனி:
தேனி மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் உயர்அதிகாரிகளின் உத்தரவுப்படி சைபர் உதவி அலுவலர்கள் எனப்படும் ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 போலீசாரை கொண்ட 31 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினருக்கு சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்த பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் சைபர் கிரைம் உதவி எண் மற்றும் இணையதளம் மூலம் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது என்பது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ்டோங்கரே எடுத்துரைத்தார்.
இந்த பயிற்சி வகுப்பில் ஏ.டி.எஸ்.பி கார்த்தி, இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தாமரைக்கண்ணன், அழகுராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.