போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்- அமைச்சர் சிவசங்கர் பேச்சு
- ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.111 கோடிக்கான பணப்பலன்கள் வழங்கப்பட்டது.
- நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை:
ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள், வாரிசு தாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கும் விழா, பணியாளர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறை மற்றும் பாவனையாக்கி திறப்பு விழா நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணி மனையில் இன்று நடைபெற்றது.
அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் வரவேற்றார். கலெக்டர் கார்த்திகேயன், ஞானதிரவியம் எம்.பி., மேயர் சரவணன், அப்துல்வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். குளிரூட்டப்பட்ட ஓய்வறை மற்றும் பாவனை யாக்கியை சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி திறந்து வைத்தார். தொடர்ந்து, அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணப்பலன்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். அந்த வகையில் 297 பேருக்கு பணப்பலன்கள் வழங்கப்பட்டது.
பின்னர், பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 43 பேருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பணப்பலன்களை வழங்கினார். ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ரூ.111 கோடிக்கான பணப்ப லன்கள் வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-
14-வது ஊதிய உயர்வு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் முடிந்திருக்க வேண்டும். அதனை தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி இருக்கிறார். தமிழ்நாட்டில் நிதி நிலைமைகளை முதல்-அமைச்சர் சரி செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்ட கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சபாநாயகர் அப்பாவு பேசும்போது, அரசு பள்ளி மாணவர்கள் சீருடையில் சென்றால் பஸ்சில் கட்டணம் வாங்க கூடாது என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தற்போது அது நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிநாடு சென்று முதல்-அமைச்சர் வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்துள்ளார். சாமானியர்களுக்கு வேலை கிடைக்கவே முதல்-அமைச்சர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இது சாமானியர்களுக்கான ஆட்சி என்றார்.
விழாவில் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் பஸ்சில் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் வழங்கப்படுகிறது. எனவே இது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சி.
48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் இருக்கும் நிலையில் ரூ.111 கோடியே 95 லட்சம் போக்குவரத்து கழகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், இசக்கி சுப்பையா, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதன்மை நிதி அலுவலர் சங்கர் நன்றி கூறினார்.