திருச்சியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்
- திருச்சியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
- கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 8 பேர் கைது
திருச்சி.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்றுக்கொண்டு இருந்த ராம்ஜி நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி பிரியா (வயது 48) மற்றும் கேசவன் மனைவி முத்துமதி ( 60 ) ஆகிய 2 பெண்களை கைது செய்துள்ளனர்.
மேலும் திருச்சி உறையூர் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ஸ்ரீரங்கம் மேலத்தெரு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனை உறையூர் போலீசார் கைது செய்து காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதேபோன்று உறையூர் விக்டோரியா ரோடு பெட்ரோல் பங்க் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ஒரு சிறுவன் பிடிபட்டார். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ. ஒரு லட்சம் ஆகும். இது தொடர்பாக உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் ரெயில்வே ஜங்ஷன் போர்டிகோ பகுதியில் கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த ஒரு வாலிபர் சிக்கினார். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜாகபந்து நாயக் (32) என்பது தெரியவந்தது.
அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக திருச்சி மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவல்லி வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் எடமலைப்பட்டி புதூர் மற்றும் கோட்டை காவல் நிலைய பகுதிகளில் கஞ்சா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் கஞ்சா வழக்குகளில் 2 பெண்கள், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.