துறையூர் நகராட்சி கூட்டத்தில் 69 தீர்மானங்கள் நிறைவேற்றம்
- துறையூர் நகராட்சி கூட்டத்தில் குடிநீர், சாலைப்பணி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் 69 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
- 24 வார்டுகளிலும் குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்து உள்ளதால் அதனை மாற்றி அமைப்பது தொடர்பாக வார்டு வாரியாக தலா 3 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் கோர முடிவு
திருச்சி:
துறையூர் நகராட்சியின் சாதாரண நகர்மன்றக் கூட்டம் தலைவர் செல்வராணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகர செயலாளரும், நகர்மன்றத் துணைத் தலைவருமான மெடிக்கல் முரளி, நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார், நகராட்சி மேலாளர் முருகராஜ், நகராட்சி பொறியாளர் தாண்டவமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் குடிநீர் அல்லாத பிற பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்து உள்ளதால் அதனை மாற்றி அமைப்பது தொடர்பாக வார்டு வாரியாக தலா 3 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் கோருவது,
நகர்மன்ற தலைவருக்கு புதிய வாகனம் வாங்குவது, நகராட்சிக்கு சொந்தமான பள்ளி கட்டடங்களை சீரமைத்து ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பது உள்ளிட்ட 69 தீர்மானங்கள் மன்றத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது.
பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையான நகர்மன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் சுதாகர், கார்த்திகேயன், சுமதி மதியழகன், பாலமுருகவேல், சரோஜா இளங்கோவன் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.