உள்ளூர் செய்திகள் (District)

விவசாய சங்க பிரதிநிதி சரமாரி வெட்டிக்கொலை

Published On 2023-04-30 08:34 GMT   |   Update On 2023-04-30 08:34 GMT
  • திருச்சி அருகே நள்ளிரவில் பயங்கர சம்பவம்
  • குடும்ப தகராறில் நடந்ததா என போலீசார் விசாரணை

மண்ணச்சநல்லூர்,

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள எம்.ஆர்.பாளையம் கிழக்கு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 65). விவசாயியான இவர் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் பிரதிநிதியாக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி முதல் மனைவி உடல் நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், பிள்ளைகளின் எதிர்காலம் கருதி மற்றொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு இரண்டாவது மனைவியும் கணவருடன் கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பலமுறை அவரை குடும்பம் நடத்த வருமாறு சண்முகசுந்தரம் நேரிலும், உறவினர்கள் மூலமாக அழைப்பு விடுத்தும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சண்முகசுந்தரம் தனியாகவே வசித்து வந்தார்.அதே பகுதியில் வசித்து வரும் சண்முகசுந்தரத்தின் சகோதரி, அவருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை விவசாய பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பி அவர், மீண்டும் வெளியில் சென்றார். பின்னர் இரவில் வீடு திரும்பிய அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். இன்று காலை நீண்ட நேரமாகியும் சண்முகசுந்தரம் வெளியில் வரவில்லை.வழக்கம்போல் காலை உணவை தயார் செய்த சண்முகசுந்தரத்தின் அக்காள் சாப்பாட்டை கொண்டு சென்றபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த அவர் அதிர்ச்சியில் கூச்சல் போட்டார். அங்கு படுக்கையில் சண்முகசுந்தரம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த அறை முழுவதும் ரத்தம் சிதறிக்கிடந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.நள்ளிரவில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் தூங்கிக்கொண்டிருந்த சண்முகசுந்தரத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து உடனடியாக அப்பகுதியினர் கொடுத்த தகவலின்பேரில் சிறுகனூர் போலீசார் கொலை சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சண்முகசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இரண்டாவது மனைவி கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து சென்று, தனியாக வசித்து வந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக சண்முகசுந்தரம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விவசாய சங்க பிரதிநிதி நள்ளிரவில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News