உள்ளூர் செய்திகள்

திருச்சியில் 3 ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை

Published On 2022-09-18 09:09 GMT   |   Update On 2022-09-18 09:09 GMT
  • திருச்சியில் புராதன பூங்கா மேம்படுத்தும் திட்டத்திற்கு ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டது.
  • திருச்சி தெப்பக்குளத்தில் படகு சவாரி, வண்ண விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடியில் 83 பணிகள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வரை 38 பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதில் பட்டவொர்த் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புராதன பூங்கா மற்றும் தெப்பக்குளத்தில் வண்ண விளக்குகளால் அழகுபடுத்தி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திட்டம் மற்றும் கிழக்கு புலிவால் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கனக வாகன முனையம் ஆகிய 3 முக்கிய திட்டப் பணிகள் இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்திற்குள் பூர்த்தி அடையும் என மாநகராட்சி என்ஜினீயர்கள் தெரிவித்தனர்.

2023 மார்ச் மாதத்திற்குள் 45 பணிகளை பூர்த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புராதன பூங்கா மேம்படுத்தும் திட்டத்திற்கு ரூ.4 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பல வரலாற்று அடையாளங்கள் இடம்பெறுகின்றன. முக்கியமாக திருச்சி மாநகரில் கோலோச்சிய மன்னர்கள், மகாராணிகள் தொடர்பான விவரங்கள் இந்த பூங்காவில் இடம்பெறுகின்றன.

தெப்பக்குளத்தில் படகு சவாரி, வண்ண விளக்குகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட இரு பணிகளும் சுற்றுலா பயணிகளுக்காக அமைக்கப்படுகிறது. மேலும் கனரக வாகன நிறுத்துமிடம் ரூ.14 கோடியில் அமைக்கப்படுகிறது.

இந்த திட்டப் பணி மூலமாக காந்தி மார்க்கெட்டுக்கு வரும் லாரிகள் நிறுத்த கூடுதல் வசதி ஏற்படும். இதனால் மார்க்கெட் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலும் கணிசமாக குறையும் வாய்ப்பு ஏற்படும்.

பஞ்சப்பூர் சோலார் பிளாண்ட் தொடர்பான பணிகளும் விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News